கரோனா வைரஸின் தாக்கமானது உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது உலகளவில் பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸின் துவக்கம் குறித்து பல்வேறு சர்ச்சைகளுடன் பல விஷயங்கள் வெளிவந்தது. சீன நாட்டின் ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகரில் அமைந்துள்ள வைரஸ் சோதனை மையத்தில் இருந்து பரவியதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்த தகவலை மறுத்த சீன அரசு, விலங்குகளில் இருந்து கரோனா பரவியதாக தெரிவித்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, இறுதியாக இறால் விற்பனை செய்த பெண்ணிடம் இருந்து கரோனா பரவியுள்ளதாக அறிவித்தது. துவக்கத்தில் இருந்தே சீன அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பல எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் ” கொரோனா வைரஸை தெரிந்து சீனா வெளியிட்டு இருந்தால், சீனா பெரும் இழப்பை சந்திக்கவேண்டியிருக்கும் என்று தனது பதிலை தெரிவித்தார். மேலும், கொரோனா துவக்கத்தில் சீனாவால் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சீனாவின் அலட்சியமான காரியத்தால் இன்று உலக நாடுகள் அவதியுற்று வருவதாகவும், சீனாவில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா வெளியேறியிருந்தால், அது ஆய்வகத்தின் பாதுகாப்பின்மையை உறுதி செய்கிறது என்றும், சீனாவே இந்த வைரஸை திட்டமிட்டு பரப்பியிருந்தால் பெரிய இழப்பை அது சந்திக்கும் என்றும், கரோனா வைரஸ் பரவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.