மே 3க்கு பிறகு பச்சை மண்டலங்களில் ஊரடங்கு கூடாது: ராகுல்

புதுடில்லி: புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைக்கு முதலில் முன்னுரிமை தர வேண்டும், மே-3-க்கு பிறகு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மட்டுமே ஊரடங்கை தொடர வேண்டும், பச்சை மண்டலங்களில் ஊரடங்கு கூடாது என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

வியாழனன்று வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைக்கு முதலில் முன்னுரிமை தந்து கவனிக்க வேண்டும். ஊரடங்கு என்பது தற்காலிக ஏற்பாடு தான். ஊரடங்கிலிருந்து ஊரடங்கிற்கு மாறுவதை, நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே என சிந்திக்க வேண்டும். மே 3-க்கு பிறகு அப்பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு தொடரச் செய்து, பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் அதாவது அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 4 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் எண்ணிக்கை இரட்டிப்பாவது, அதிக கொரோனா தொற்று உள்ள மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாக வகைப்படுத்தப்படும். கடந்த 28 நாட்களில் புதிய தொற்றுகள் ஏதுமில்லாத பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்படும். தற்போது இந்தியாவில் பச்சை மண்டலமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.