கொரோனா வைரஸின் காரணமாக உலக அளவில் பொருளாதாரமானது மிகவும் வலுவற்ற தன்மையை அடைந்துள்ளது. உலகளவில் உள்ள பங்குகள் மற்றும் கடன் போன்ற சொத்து வீழ்ச்சி அடைந்து பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக பெரும் சொத்தாகக் கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், தங்கத்தை பதுக்கி வைக்கும் செயலும் நடைபெற்று வருவதாகவும், இந்த வருடத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் ரூபாயின் மதிப்பில் தங்கத்தின் விலை உயர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், வரும் 18 மாதங்களில் தங்கத்தின் விலை 3000 டாலராக உயரும் என்றும், இதனால் 10 கிராம் தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 82 ஆயிரமாக உயரும் என்றும், கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 75 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், இன்னும் 18 மாதங்களில் தங்கத்தின் விலை மேலும் 75 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி 24 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.4,593 ஆகவும், 1 சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.36,744 ஆகவும் இருக்கிறது. 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.4,262 ஆகவும், 1 சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.34,096 ஆகும். தங்கத்தின் விலையும் இன்று கிராமிற்கு ரூ.42.60 ஆகவும், 10 கிராம் ரூ.426 ஆகவும், கிலோ ரூ.42,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.