எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றபடி கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரும் எதிரணி உறுப்பினர்களை முதலில் தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரோஹித்த அபேகுணவர்தன முன்வைத்துள்ளார்.
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை நாட்டின் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக மீண்டும் கூட்டி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றும்படி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்கட்சியினர் அனைவரும் கூட்டாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றார்.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததுடன், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ஜனாதிபதியினால் அரச நிதியை மேலதிகமாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பினை மீறி ஜனாதிபதி செயற்படுவாராக இருந்தால் அவரது குடியுரிமை குறைந்தது 5 வருடங்களாவது நீக்கப்படும் என்றும் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மங்கள, ஆகவே உடனடியாக நாடாளுமன்றத்தை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித்த அபேகுணவர்தன நாடாளுமன்றத்தை மீளக் கூட்டினால் மக்கள் பிரதிநிதிகளிடையே வைரஸ் பரவும் ஆபத்து ஏற்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் பேசிய அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன,
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கம் நடத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிர்கட்சி முட்டுக்கட்டை இடுவதை அவதானிக்க முடிகின்றது. முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரஇ 5 வருடங்களாக நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்தஇ அதே அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வழிசெய்த மங்கள சமரவீரஇ ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அண்மையில் அனுப்பியிருந்தார்.
கடிதத்தின் சில இடங்களில் அச்சுறுத்தல்கள் சிலவற்றையும் இணைத்துள்ளார். நிதிக் கையாள்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும்இ ஆகவே உடனடியாக நாடாளுமன்றத்தை அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்திற்காக பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு அழைத்தல்இ தேர்தலுக்கான திகதி குறித்தல் என்பன இடம்பெற்றிருக்கும் நிலையில், அரசியலமைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டு கொரோனா வைரஸைனை ஒழிக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி செயலாற்றிவருகின்றார். இப்படியிருக்கும் நிலையில் மங்கள சமரவீர நாட்டை நிலைகுலையச் செய்யும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பினை மீறுகின்ற நபர்களின் சொத்துக்களை முடக்கவும், சம்பந்தப்பட்ட நபரது குடியுரிமையை 5 வருடங்களுக்கு இரத்து செய்யவும் முடியும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 5 வருடங்களாக நல்லாட்சியின் கீழ் மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் செய்த செயற்பாட்டினை சரியாக விசாரணை செய்தால் சட்டம் கடமையை செய்தால் அவர்களின் சொத்துக்களே முடக்கப்படும், அவர்களின் குடியுரிமையே பறிக்கப்படும்.
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட முடியும் என்றது அரசியலமைப்பில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மங்கள சமரவீரவினால் சுட்டிக்காட்டி நிரூபிக்க முடியுமா? சாதாரணமாக நாட்டின் சுகாதாரத்துறையினரின் பரிந்துரைக்கு அமைய சமூக இடைவெளி குறிப்பாக ஒரு மீட்டர் தூரத்தை பேணும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கின்ற நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மங்கள சமரவீர கோருகிறார்.
அவர் கூறுகின்றபடி நாடாளுமன்றத்தைக் கூட்டினால் எவ்வாறு 225 உறுப்பினர்களும் சமூக இடைவெளியைப் பேணுவார்கள் என்பது குழப்பம்தான். அதேபோல ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டாலும் அனைவரிடத்திலும் அது பரவிவிடும்.
எனவே முதலில் எதிர்கட்சி உறுப்பினர்களையே தனிமைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் முழு நாடுமே சுத்திகரிக்கப்படும். அதேபோல வெளிநாட்டு நிதிகள் அரசாங்கத்திற்குக் கிடைத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறுகின்றார். அவர் கூறுகின்றபடி நிதிகள் கிடைத்திருந்தால் ஊடகங்களுக்கு முன்பாக பகிரங்க விவாதத்திற்கு என்னுடன் மோதி அவற்றை நிரூபிக்கும்படி சவால் விடுக்கின்றேன் என்றார்.