பாடசாலைகளை திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா? இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் கிராமிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆராய்ந்து வருகின்றார்.

ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இது தொடர்பில் வினவியுள்ளார்.

வலய கல்வி இயக்குனர்களின் பரிந்துரைக்கு அமைய கிராமிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதற்கு ஜனாதிபதி இந்த கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளார்.

அங்கு நீர், சுகாதார வசதிகள் மற்றும் சுகாதார தொடர்பான பிரச்சினைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கு அமைய அரச மற்றும் தனியார் பிரிவுகளின் அனைத்து சேவைகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.