ரசயான கசிவு விவகாரம்.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சமூகத்திலுள்ள கொல்லப்பள்ளி பகுதியில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ஆலை இயங்கி வருகிறது. இன்று அதிகாலை ஆலையில் பயன்படுத்தப்படும் ஸ்டைரின் என்ற பெயரிலான வாயு குழாய்களில் இருந்து கசிந்து விபத்து ஏற்பட்டது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எல்ஜி பாலிமர் ஆலை மூடப்பட்டிருந்தது. இன்று ஆலையை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இரவு முதல் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் உள்ள உபகரணங்கள் இயந்திரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது, அதிகாலை ஆலையில் பயன்படுத்தப்படும் ஸ்டைரின் வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து வாயு வெளியேறி சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் ஐந்து கிராமங்களில் பரவியது.

இதனால், ஐந்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் ஆகியோர் வளர்த்துவரும் ஆடு, மாடு,கோழி, நாய் ஆகியவை உள்ளிட்ட கால்நடைகளுக்கு முதலில் பாதிப்பு ஏற்பட்டு அதை மயங்கி சரிந்தன.

சற்று நேரத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் காற்றில் ஒரு விதமான நெடி வாசனை பரவுவதை உணர்ந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீடுகளிலிருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

மேலும், வீடுகளுக்கு வெளியே காற்றில் ஸ்டைரின் வாயு மிகவும் அடர்த்தியாக இருந்தால் பல பேர் சாலைகளில் மயங்கிச் சரிந்தனர். இந்த விபத்தில் 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 8 பேர் இதுவரை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டனர்.

விபத்து ஏற்பட்ட போது மேலெழுந்த ரசாயன கசிவிலிருந்து தப்பித்துக்கொள்ள, பைக்கில் சென்ற இருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர். அதேபோல ஒரு பெண் இரண்டாவது மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஸ்கூட்டர் அருகில் நின்றுகொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுவது வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.

விசாகப்பட்டினத்தின் தெருக்களில் பல ஆண்களும் பெண்களும் மயங்கி வீழ்ந்துள்ளதைப் பல வீடியோக்களில் காண முடிகின்றது.

குறைந்தபட்சம் நூறுபேராவது மயங்கியிருப்பார்கள். முககவசம் அணிந்தவர்கள் மயங்கிய நபர்களை ஆம்புலன்ஸ் நோக்கி தூக்கிச் சென்றவாறு இருக்கின்றனர்.

இதையடுத்து, 20 ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாயு கசிவு விபத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள், முதியோர்கள் பெண்கள் ஆகியோரும் உள்ளனர்.

வாயு கசிவு விபத்து பற்றி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மதியம் விசாகப்பட்டினம் சென்று விபத்து நடந்த ஆலையை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற உள்ளார்.

மேலும் ஆந்திராவில் உள்ள மற்ற நகரங்களிலிருந்தும் மருத்துவர் குழுவை விசாகப்பட்டினத்திற்கு அனுப்பிவைக்கவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர் நநேந்திர மோடி ஆந்திர முதல்வரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.