முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம்… பின்னடைவில் முதலிடம் நோக்கி – கமல்

முன்னேற்ற பாதையில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு சற்றும் தமிழகத்தில் குறையவில்லை. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003 ஆக உள்ளது. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,549 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3722 ஆகவும் அதிகரித்துள்ளது.

முன்னதாக மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. அதை தடுக்க கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடைகளை மூடவும், ஓன்லைன் மூலம் மது விற்கவும், தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. தாங்குமா தமிழகம்” எனத் தெரிவித்துள்ளார்.