தமிழகத்தில் வீட்டுக்கு வந்த அத்தையை இளைஞர் காய்கறி நறுக்கும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது அத்தை குணசுந்தரி, கணேஷின் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதால் காய்கறி நறுக்கும் கத்தியால் குணசுந்தரியை கணேஷ் குத்தி கொன்றுவிட்டு கணேஷ் தப்பியோடியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், கணேஷ் அதே பகுதியில் உறவுக்கார பெண் ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்ததாகவும், அதனை குணசுந்தரி தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். தப்பியோடிய கணேஷை பொலிசார் தேடி வரும் நிலையில் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.