கொரோனா வைரஸை 100 சதவிகிதம் தடுக்கும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துவிட்டோம் என்று கலிபோர்னியா நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
கலிபோர்னியாவிலுள்ள Sorrento Therapeutics என்ற உயிரிதொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, தாங்கள் கண்டுபிடித்துள்ள STI-1499 ஆன்டிபாடி, மனித செல்களுக்குள் கொரோனா வைரஸ் நுழைவதை 100 சதவிகிதம் தடுப்பதை ஆய்வக சோதனையில் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், மாதம் ஒன்றிற்கு தங்களால் 200,000 பேருக்கான மருந்தை கண்டுபிடிக்கமுடியும் என்றும், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே தங்களால் அந்த மருந்தை கண்டுபிடித்துவிடமுடியும் என்றும் Sorrento நிறுவனம் கூறியது. Sorrento நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம் அவசர ஒப்புதல் கோரியுள்ளது.
ஆனால், இதுவரை அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்கிடையில், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் Sorrento நிறுவனத்தின் பங்குகள் 220 சதவிகிதம் வரை உயர்ந்தன.
கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் Sorrento நிறுவன முதன்மை செயல் அலுவலரான Dr Henry Ji. 100 சதவிகிதம் பலனளிக்கக்கூடிய ஒரு தீர்வு உள்ளது என்கிறார் அவர்.
ஒருவரது உடலில் கொரோனா வைரஸை செயலிழக்கச்செய்யக்கூடிய ஒரு ஆன்டிபாடி இருக்குமானால், அவர் சமூக விலகலை பின்பற்றவேண்டிய அவசியம் கூட இல்லை, பயமின்றி சமுதாயத்தில் நடமாடலாம் என்கிறார் அவர்.
என்றாலும், இந்த சோதனைகள் ஆய்வகத்தில் மனித செல்கள் மீதுதான் நடத்தப்பட்டுள்ளனவேயொழிய, மனிதர்கள் மீது அல்ல! ஆகவே, அது மனித உடலுக்குள் எப்படி செயல்படும், அதனால் பக்க விளைவுகள் என்னென்ன ஏற்படும் என்பது போன்ற விடயங்கள் இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.