தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சார்ந்தவர் முத்துசாமி (வயது 36). இவருக்கும், அங்குள்ள அருண்மொழி கிராமத்தை சார்ந்த ஆனந்திக்கும் (வயது 26) என்பவருக்கும் இடையே கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஐந்து வயதுடைய ஜனனி என்ற பெண் குழந்தையும், 2 வயதுடைய கதிரவன் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
கணவன் – மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் சண்டை அதிகமாகி தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் சில நாட்களுக்கு முன்னதாக தனது தாயின் வீட்டிற்கு ஆனந்தி சென்ற நிலையில், மனைவியை பிரிந்து இருக்க மனமில்லாது முத்துசாமி மாமியாரின் இல்லத்திற்கு சென்று சமாதானம் பேசியுள்ளார்.
மேலும், இனிமேல் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழலாம் என்று கூறி மனைவி மற்றும் குழந்தைகளை மீண்டும் ஸ்ரீபுரம்தான் ஊருக்கு அழைத்து வந்த நிலையில், இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆனந்தி தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
மனைவி இறந்த செய்தியை அறிந்த முத்துசாமியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாயையும், தந்தையையும் இழந்து பச்சிளம் குழந்தைகள் தவித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை அதிகரித்துள்ளது.