ஜப்பானில் நள்ளிரவில் முதியோர் இல்லாம் ஒன்றில் புகுந்து 19 ஊனமுற்ற முதியோர்களை தூக்கத்தில் கொலை செய்த கொடூர இளைஞன் தொடர்பில் சில்லிட வைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
ஜப்பானின் சாகமிஹாரா பகுதி காவல் நிலையத்தில், ரத்தத்தில் தோய்ந்த ஆயுதங்களுடன் சரணடைந்த 26 வயது சதோஷி உமாத்சு என்ற இளைஞரே தாம் முன்னர் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் புகுந்து 19 கொலைகள் செய்தவர்.
கடந்த 2016 ஜூலை 16 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் ஜப்பானை மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கியது.
ஊனமுற்றவர்கள் ஜப்பானில் மட்டுமல்ல உலகின் எந்த பகுதியிலும் வாழத்தகுதியற்றவர்கள் என நம்புவதாக குறிப்பிட்ட உமாத்சு,
தாம் கொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதுடன், மேலுமுறையீட்டுக்கு தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பையும் நிராகரித்து, மரண தண்டனையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜப்பானில் Tsukui Lily Garden என்ற ஊனமுற்றவர்களுக்கான முதியோர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர் சதோஷி உமாத்சு.
தொடர்ந்து ஊனமுற்றவர்கள் மீதான வெறுப்பு காரணமாக 2016 பிப்ரவரி மாதம் தமது பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.
நான்கு மாதங்களுக்கு பின்னர் ஜூலை 26 ஆம் திகதி நள்ளிரவு குறித்த முதியோர் இல்லத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து இந்த கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
தம்மை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளிடம், ஊனமுற்றவர்கள் நாட்டிற்கு பாரம், அவர்கள் உயிருடன் இருப்பது வீண் என முணுமுணுத்துள்ளார்.
Tsukui Lily Garden முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறும் சில மாதங்கள் முன்னர், முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்,
ஊனமுற்ற முதியவர்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் தாமே அந்த பணியை முன்னின்று செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் உமாத்சு குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, தமது பெயர் முகவரியுடன், தொலைபேசி இலக்கமும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதம் தொடர்பாக பொலிசார் கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தியதுடன், உளவியல் சிகிச்சைக்கும் பரிந்துரைத்து மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் மார்ச் 2 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட உமாத்சு, சுமார் 146 நாட்களுக்கு பின்னர் ஒரு நள்ளிரவில் Tsukui Lily Garden முதியோர் இல்லத்தில் புகுந்து தமது கொடூர திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று Tsukui Lily Garden முதியோர் இல்லத்தில் 149 முதியோர்களும் 9 ஊழியர்களும் இருந்துள்ளனர்.
நள்ளிரவில் தூக்கத்தில் இருந்த முதியவர்களை வரிசையாக கூரான ஆயுதத்தால் கழுத்தை குறிவைத்து தாக்கியுள்ளார்.
இதில் 19 பேர் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டதுடன், 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து நள்ளிரவு 2.50 மணியளவில் பொலிசார் வந்து சேர்வதற்குள் உமாத்சு அங்கிருந்து மாயமானான்.
மிகவும் ஆபத்தான நகரில் நடமாடுவது பொலிசாருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனால் உமாத்சு விடியும்வரை காத்திருந்த பின்னர் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.
ஹிட்லரின் பாணியை பின்பற்றியதாக கூறிய உமாத்சு, தாம் செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.
கடந்த ஜனவரி மாதம் நீதிமன்ற விசாரணை தொடங்கிய நிலையில், உமாத்சு மீது 19 கொலை வழக்கும் 26 கொலை முயற்சி வழக்கும் நிரூபிக்கப்பட்டன.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள உமாத்சு, தமது நாளை எண்ணி ஜப்பானில் உள்ள சிறை ஒன்றில் காத்திருக்கிறார்.