நண்பன் மடியில் பிரிந்த உயிர்..!!

இந்தியாவில் ஊரடங்கால் வேலையை இழந்து, சொந்த ஊருக்கு புறப்படும் வழியில் நண்பரின் மடியில் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாகூப் முகமது மற்றும் அம்ரித் குமார். பிழைப்புக்காக குஜராத் மாநிலம் சூரத் நகரில் சென்றுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தியுள்ள ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பை இருவரும் இழந்துள்ளனர்.

கையில் இருந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியதையடுத்து இருவரும் சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்துள்ளனர்.

ஒரு லொறியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுள்ளனர். அதிக கூட்டம் இருந்ததால் உட்கார இடமின்றி இருவரும் நின்றுகொண்டே பயணமாகியுள்ளனர்.

இருவரும் பயணம் செய்த லொறியானது மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. அம்ரித்துக்கு கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என யாகூப் பயந்தார்.

அந்த வாகனத்தில் இருந்த அனைவருக்கும் அதே அச்சம். அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கிவிட முடிவு செய்தனர்.

வேறுவழியின்றி தன் நண்பனுடன் யாகூப் லொறியைவிட்டு இறங்கினார். வண்டியை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் அம்ரித் மயக்கமடைந்துள்ளார்.

தன் நண்பனை மடியில் சாய்த்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். வாகனத்தில் சென்றவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

கொளுத்தும் வெயிலில் தன் நண்பனை மடியில் படுக்க வைத்துக்கொண்டு யாகூப் சாலையில் அமர்ந்திருந்தார். இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் மாவட்ட மருத்துவமனைக்கு அம்ரித்தை கொண்டுசென்றனர்.

அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.

ஆனால், சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அம்ரித் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நண்பனை மடியில் கிடத்தியவாறே யாகூப், உதவிகேட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.