கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்களிடம் யாசகம் பெற்று சேகரித்த ரூ10,000-த்தை மதுரை மாவட்ட ஆட்சியர் வினயிடம் வழங்கிய முதியவர் பூல்பாண்டியனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இது தொடர்பாக முதியவர் பூல் பாண்டியன் கூறியதாவது,
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் எனது சொந்த ஊர். 40 ஆண்டுகளாக யாசகம் எடுத்து வருகிறேன். நான் யாசகம் பெற்று கிடைக்கும் பணத்தில் பள்ளி கூடங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறேன்.
இதுவரை 400 பள்ளிகளுக்கு உதவி செய்துள்ளேன். பொதுவாக பள்ளிகளுக்கு நாற்காலிகள், மேசைகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வாங்குவதற்கு நான் யாசகம் பெற்ற நிதியை வழங்கி இருக்கிறேன்.
சுமார் 2 மாதங்களுக்கு முன்னர்தான் மதுரைக்கு வந்தேன். மதுரையில் நடைபாதைகள்தான் என்னுடைய இருப்பிடமாக இருந்தன. அப்போதுதான் தன்னார்வலர்கள் என்னை நடைபாதையில் இருந்து மீட்டனர்.
மதுரை மாநகராட்சியின் முகாமில் நான் தங்க வைக்கப்பட்டிருந்தேன். கொரோனாவால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நானும் உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினேன். தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் மதுரை மாட்டுத் தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, பழ சந்தை, பூ மார்க்கெட்டுகள் ஆகியவற்றை தேர்வு செய்து யாசகம் பெற்று வந்தேன். கடந்த 10 நாட்களாக தொடர்ந்து இந்த பகுதிகளில் யாசகம் பெற்று வந்தேன்.
இதன் மூலம் ரூ10,000 பணம் எனக்குக் கிடைத்தது. தற்போது இந்த பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குகிறேன்.
இதேபோல் மேலும் 10 மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறேன். அங்கும் பொதுமக்களிடம் யாசகம் பெற்று அதை கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்காகவே வழங்க இருக்கிறேன். என்னால் இயன்ற உதவியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த தகவல் வைரலானதில் இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.