பிஸ்கெட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தும்..!!

வெதுவெதுப்பான நீரில் பிஸ்கட்டை முக்கி எடுத்து குழந்தையின் வாயில் வைத்தால் குழந்தை சப்புகொட்டி சாப்பிடும்.

ஆனால் அப்படி கொடுக்கும் பிஸ்கட் குழந்தைக்கு சத்தை தருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். தாய்ப்பாலுக்கு இணை உணவாக இளந்தாய்மார்கள் பிஸ்கட்டுகளைதான் தேர்வு செய்கிறார்கள்.

பிஸ்கெட் குழந்தைக்கு எந்தவிதத்திலும் நன்மை தராது. சுவையாக இருக்கும் பிஸ்கட் வகையின் ஊட்டச்சத்துக்களை கணக்கிட்டால் அவை பூஜ்ஜிய அளவில் இருக்கும்

ஆரோக்கியமற்ற கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், செயற்கை சுவையூட்டி பொருள்கள் போன்றவற்றின் ஒட்டு மொத்த கலவையே பிஸ்கட். இவை வெற்று கலோரிகள் அவ்வளவே.

சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் அழிந்துவிடுகின்றன. மைதாமாவு கெடுதி என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

பிஸ்கட் செரிக்க கூடுதல் நேரம் எடுத்துகொள்வதால் வளரும் குழந்தைகளின் குடல்கள் பணியையும் தாமதப்படுத்தி வளர்ச்சியையும் பாதிக்கிறது. அதனால் குழந்தைக்கு பசியின்மை உண்டாகும்.

பிஸ்கெட்டால் ஏற்படும் விளைவுகள்

  • பிஸ்கட்டில் இருக்ககூடிய மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட், சுவையூட்டிகள், நிறமிகள் என்று எதுவுமே உடலுக்கு நன்மை தருபவை கிடையாது. பிஸ்கெட் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக கொடுத்தால் அது மலச்சிக்கல் பிரச்சனையை தீவிரப்படுத்திவிடும்.
  • 100 கிராம் பிஸ்கட்டில் 22 கிராம் அளவு சர்க்கரை உள்ளது. பதப்படுத்தப்பட்ட பிஸ்கர் வகையில் அதிகப்படியாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுவதால் குழந்தைகள் இனிப்பு போதைக்கு அடிமையாக மறைமுகமாக பிஸ்கட் காரணமாகிறது. பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரைக்கு மாற்றாக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சுகர் சிரப், சோள மாவு சேர்த்திருப்பார்கள். இவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவை குறைக்கும்.
  • குழந்தைக்கு பிஸ்கட் தருவதன் மூலம் ட்ரான்ஸ் கொழுப்பை அதிகரிக்க செய்கிறோம். பதப்படுத்தப்பட்ட உணவில் அவற்றின் வடிவமும் சுவையும் நிலையாக கெடாமல் இருக்க பயன்படுத்தப்படுகின்றன. உடலில் இருக்கும் நல்ல கொழுப்பின் அளவை குறைத்து கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து மாற்றம் உண்டாக்க தொடங்கும்.
  • ட்ரான்ஸ் கொழுப்புகள் உடல் பருமன், நீரிழிவும். நரம்பு கோளாறு பிரச்சனைக்கு வித்திடுகின்றன.
  • உச்சகட்டமாக பிஸ்கட்டில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை பாதிக்கின்றன.
  • க்ரீம் வகை இல்லாத பிஸ்கட்டுகளே இத்தகைய பாதிப்பை உண்டாக்கும் போது க்ரீம்களும், வண்ணங்களும், செயற்கை சுவையூட்டிகளும் நிறைந்த பிஸ்கட்டுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு இதை விட கூடுதலான பாதிப்பே உண்டாகி விடும்.
  • பிஸ்கட்டை அளவாக வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று மட்டுமே கொடுக்க வேண்டும். மாறாக வீட்டில் சிறுதானிய பிஸ்கட் தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.