இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகம் தமிழக எல்லை நுழைவுப் பகுதி நெடுஞ்சாலைகளில் 11 இடங்களில் அகலமான அகழி போல் சாலைகளை துண்டித்துப் போக்குவரத்தை தடை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் “குடிமக்கள் நடந்து செல்வதை தடுக்க முடியாது” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் கர்நாடகம் சாலைகளை துண்டித்து நடந்து சென்று வருவதையும் தடுத்திருப்பது சட்ட அத்துமீறலாகும்.
கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக என காரணம் கூறப்பட்டாலும், மருத்துவ தேவை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான போக்குவரத்து தடை செய்யப்படுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.
இன்று (25.05.2020) முதல் திருச்சி – பெங்களூரு தினசரி விமான சேவை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வசதியானவர்களை அனுமதித்து, ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தடை செய்து ஒடுக்குவது பாரபட்சமான செயலாகும்.
கர்நாடக அரசின் சட்ட அத்துமீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், இதன் மீது தமிழ்நாடு அரசு தலையிட்டு இரு மாநிலங்களுக்கும் இடையிலான போக்குவரத்து தடைக்கான ஆழமான அகழிகளை மூடி சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்..