120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்: சடலமாக மீட்கப்படும் கண்ணீர் வீடியோ

தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவர்தன். இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் போச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றுள்ளார்.

கோவர்தனின் தந்தை விவசாய நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளார்.

அதில் தண்ணீர் கிடைக்காததால் அதை மூடிவிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், அவரது குடும்பத்தினரும் அங்கு உடனிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அங்கு விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

இதனால் பதறிய சிறுவனின் குடும்பத்தினர் போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டது. இரவு நேரமானதால் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில், இன்று காலை 3 வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சடலமாக மீட்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.