கோடைக்காலத்தில் கொட்டும் வியர்வை, ஆடைகளை நனைத்துவிடுகிறது. கோடை வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் போன்ற நோய்கள் நம்மை பயமுறுத்துகிறது.
உடலின் வெப்பநிலையை பராமரிக்க வியர்வை சுரப்பிகள் உதவுகிறது. உடலில் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வை சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வை சுரப்பிகளில் தூசி, அழுக்கு படிவதால் தான் வியர்க்குரு உண்டாகிறது.
வியர்க்குருவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் எனப் பல தோல் நோய்கள் ஏற்பட காரணமாகிவிடும்.
வியர்க்குரு வர காரணங்கள் :
நேரம் தவறி தூங்குவதாலும், சூடான தரையில் படுத்து தூங்குவதாலும் வியர்க்குரு ஏற்படுகின்றது.
கோடைக்காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதனால் வியர்க்குரு உண்டாகிறது.
கோடைக்காலத்தில் வெகுநேரம் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம். அப்படி செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், கறுப்பு நிறக் குடைகளை தவிர்த்துவிட்டு, வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்தலாம்.
வியர்க்குருவை விரட்டுவதற்கான வழிமுறைகள் :
கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய், கிர்ணி பழம், இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றை அதிகம் பருகலாம். இவை உடலில் ஏற்படும் நீரிழப்பை சரிசெய்து வியர்க்குருவைப் போக்க உதவுகிறது.
மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் ஒரே அளவு எடுத்து, மென்மையாக அரைக்க வேண்டும். பின், அதை வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும். இதுபோன்று வாரம் மூன்று முறை குளித்தால் வியர்க்குருவை விரட்டலாம்.
பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, வெந்தயம் போன்றவற்றை கலந்து பொடி செய்து தேய்த்து குளிப்பதன் மூலம் வியர்க்குருவை தடுக்கலாம்.
கற்றாழையின் உள்பகுதியை எடுத்து தேய்த்து குளித்தால், வியர்வை பிரச்சனைகள் நீங்கும்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பாக, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை நீரில் கரைத்து, தேய்த்து குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதைப்போன்று வெட்டிவேர் பொடியையும் பயன்படுத்தலாம்.
கோடைக்காலத்தில் உணவு வகைகளை வறுத்து சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு கூட்டு மற்றும் குழம்பாக சமைத்து சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கோடைக்காலத்தில் முடிந்த வரையில் குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரில் தினமும் இருமுறை குளிக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை உடுத்துவதன் மூலம் வியர்வையானது சருமத்தில் தங்குவதை தடுத்து வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.