திருப்பூரில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்ததால், உதவி கேட்டு கத்திய பெண்ணை அருகில் இருக்கும் தோசைக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி(49) என்ற பெண்மணி தன் இரு பிள்ளைகள் மற்றும் கணவரோடு மைசூர், தரசிபுரா பகுதியில் வாழ்ந்து வந்தார். உடல்நலக் கோளாறால் கணவனை இழந்த லட்சுமி பிழைப்பிற்காக தன் இரு பிள்ளைகளுடன், திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்.
தன் சொந்த உழைப்பில் மகன் மற்றும் மகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது பிள்ளைகள் இருவரும் வெளியூரில் வசித்து வருவதால், லட்சுமி மட்டும் திருப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டுப் பக்கத்தில் குடியிருக்கும் சுரேஷ் என்பவரின் 22 வயதான மகன் பூபதி நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தீடீரென கதவை கூட தட்டாமல் லட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமி கத்தி கூச்சல் போட தொடங்கியுள்ளார்.
லட்சுமியை தடுக்க முயன்ற பூபதி கோபமடைந்து அறையில் இருந்த தோசைக் கல்லை எடுத்து லட்சுமியின் தலையில் தாக்கினார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலைக் குறித்து அறிந்த திருமுருகன்பூண்டி பொலிசார் சம்பவ இடத்திற்குவந்து லட்சுமியின் உடலை மீட்டு, கொலைக்கு காரணமாகிய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.