டிக் டாக் டூயட் பழக்கம்.. கணவன், குழந்தையை தவிக்கவிட்டு சிறகடித்த சோகம்.!

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 37). முருகன் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (வயது 22). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஏழு வயதுடைய ஆண் குழந்தை மற்றும் ஐந்து வயதுடைய ஆண் குழந்தை என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஆனந்திக்கு டிக் டாக் செயலி அறிமுகம் கிடைக்கவே, டிக் டாக் மூலமாக கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கோவிந்தராஜ் தனது முகவரியை கொடுத்து வீட்டிற்கு வருமாறு கூறிய நிலையில், ஆனந்தி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி கோவிந்தராஜன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கோவிந்தராஜ் இல்லாத காரணத்தால், வீட்டில் இருந்த நபரிடம் ஆனந்தி விசாரித்துள்ளார்.

இதில் கோவிந்தராஜ் கொடுத்த முகவரி அவரது சகோதரியின் இல்லம் என்பது தெரியவந்த நிலையில், கோவிந்தராஜன் குறித்து அவரது சகோதரியிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனை கேட்ட கோவிந்தராஜனின் சகோதரி, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், ஆனந்திக்கும் – அலைபேசி மூலம் கோவிந்தராஜுக்கும் காவல் துறையினர் ஆலோசனை வழங்கிய நிலையில், ஆனந்தியின் கணவரான முருகனிற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் அறிவுரைப்படி ஆனந்தியை அவரது கணவருடன் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோவிந்தராஜன் சகோதரியும் அவரது கணவரும் விழுப்புரத்துக்கு அழைத்து சென்று ஆனந்தின் கணவரிடம் ஆனந்தியை ஒப்படைத்துள்ளனர். ஆனந்தியின் கணவர் முருகன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். டிக் டாக் மோகத்தால் கிடைத்த பழக்கத்தின் அடிப்படையில், பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.