கொரோனாவை விரட்டுவதாக கூறி பக்தர்கள் கையில் முத்தம் கொடுத்து வந்த சாமியார் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் அவரிடம் முத்தம் பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் பல ஆண்டுகளாக ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி பக்தர்களை நம்பவைத்து வந்துள்ளார்.
இதற்கிடையே, கொரோனா பரவல் குறித்து மாநில நிர்வாகம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரித்த போதும் அதனை கேட்காமல் கையில் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களிடம் அவர் கூறி வந்தார்.
இதையடுத்து கொரோனா அச்சத்தில் இருந்த பலர் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்றுச் சென்றனர். இந்நிலையில் கொரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அஸ்லம் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்ற நபர்கள் குறித்து மத்திய பிரதேசம் மாநில சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனாவுக்கு விடப்பட்ட சவாலில் அஸ்லாம் பாபாவை தாக்கி விட்டு தனது வீரியத்தை கொரோனா காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா அச்சுறுத்தலால் அவரிடம் முத்தம் வாங்கிச் சென்ற நபர்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.