தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் கம்மங்காட்டுக்குளம் பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகனின் பெயர் கேசவன் (வயது 28). இவர் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள ஊஞ்சலூர் நடுப்பாளையம் பகுதியை சார்ந்தவர் சண்முகம். இவரது மகள் கிருத்திகா (வயது 25). இவர் பி.ஏ. பயின்றுள்ளார். கிருத்திகா, கேசவன் பணியாற்றி வரும் தனியார் மருத்துவமனையின் ஈரோடு கிளை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், கிருத்திகா திருமணம் குறித்து பேசியுள்ளார். இதனைக்கேட்ட கேசவன், தனது வீட்டில் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள் என்றும், நாம் திருமணம் செய்த பின்னர் எங்களது வீட்டில் தெரிவித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து கிருத்திகாவின் பெற்றோர்களின் சம்மதத்துடன் கிளம்பட்டியில் இருக்கும் கோவிலில் 3 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்த சூழலில், திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு கேசவன் வராத நிலையில், திருமணம் நின்றது. இதனால் கிருத்திகா மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி மனவேதனை அடைந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முந்தினாதனன்று கேசவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கிருத்திகாவும் மன வேதனையில் இருந்த நிலையில், பெற்றோர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். இருந்தாலும், காதலனின் மறைவால் சோகத்தில் மூழ்கிய கிருத்திகா, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் கையை கண்ணாடியால் கிழித்து, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.