ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பேட்ட திரைப்படத்தின், இரண்டாம் பாகம் உருவாகுமா என்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி நடித்த பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2019ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இப்படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். பேட்ட படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘பேட்ட 2’ குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘படம் எடுக்கும்போது 2ஆம் பாகம் குறித்தெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் படம் வெளியான பின்னர் 2ஆம் பாகத்துக்கான சாத்தியங்கள் குறித்து இரசிகர்கள் நினைத்தது சுவாரஸ்யமாக இருந்தது. என்னிடம் பலர் அது பற்றிக் கேட்க ஆரம்பித்தனர். சிலரோ அது எப்படி இருக்க வேண்டும் என்று யோசனைகள் கூறினர்.
‘பேட்ட 2’ படத்துக்கான யோசனைகள் என சமூக வலைத்தளங்களில் எங்களுக்குச் செய்தி அனுப்புவார்கள். அவை அனைத்துமே சுவாரஸ்யமாக இருந்தன. ‘பேட்ட 2’ படத்தின் கதை என்னவாக இருக்கலாம் என்பதுவரைகூட சிலர் தெரிவித்தனர். ஆனால் இப்போதைக்கு ‘பேட்ட 2′- படத்துக்கான கதை என்னிடம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அது நடக்கலாம்’ என அவர் கூறினார்.