சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.
காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியில் இந்த தகவலை தெரிவித்த மர்ம நபர், வேறு எந்த விபரங்களையும் கூறாமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு பொலிஸார் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர். ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 1 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், பொலிஸாருக்கு கிடைத்த தகவல் பொய்யானது என பொலிஸார் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.