வாழ்க்கை என்பது இனிப்பும், கசப்பும் கலந்து காணப்படும். எல்லாருடைய வாழ்க்கையிலும் கசப்பான அனுபவம் இருக்கத்தான் செய்யும். இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு முன்னான தங்களுடைய கசப்பான அனுபவங்களை திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய கணவரிடம் கூறலாமா? வேண்டாமா என குழப்பம் அடைகின்றனர்.
நண்பர்கள் “சொல்லிவிட்டால் ஒன்றும் தப்பில்லை” என்றும், “சொல்லி விடாதே உனது வாழ்க்கையை நீயே வீணாக்கிடாதே” என்று உறவினர்களும் கூறி பயமுறுத்துவார்கள். இப்படிப்பட்ட நிலையில், ஒரு தெளிவான முடிவு தெரியாமல் பெண்கள் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கையில், அவருக்கு சரியான ஆலோசனை கூற எவரும் இல்லாத நிலையில் யார் மூலமாகவோ இவர்களின் கடந்த காலம் கணவருக்கு தெரியவரும்.
இதனால், ஏற்படும் பூகம்பத்தில் எதிர்காலமும் சேர்ந்து ஆட்டம் கண்டு விடும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய கணவரின் கடந்த காலத்தை சுமைதாங்கிகள் ஆக ஏற்றுக்கொள்கின்றனர். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்கின்றது.
ஆனால், இந்த பக்குவம் இந்தியாவில் இருக்கும் ஆண்களுக்கு இருக்கின்றதா என்றால், கேள்விக்குறிதான். காரணம் இங்கே இருக்கும் சமூக அமைப்பு அவனுடைய கடந்த கால பொறுப்பினை ஒப்படைத்தது போல, ஒரு பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் ஒப்படைக்க முடிவதில்லை.
ஆண்கள் பல திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால், ஒரு பெண் அப்படியல்ல. ஒரு முறை அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டால் வாழ்நாள் முழுமைக்கும், அந்த திருமண பந்தத்தில் கட்டுண்டு கிடக்க வேண்டும். இதுதான் இன்றைய குடும்ப கட்டமைப்பின் நியதி.
குடும்பத்தின் கவுரவமாகவும், எதிர்காலமாகவும் பெண்களை நிர்ணயிக்கின்றனர். இதுவும் ஒருவகையில் அடிமைத்தனம் தான் இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணங்கள் பல மாறுதலுக்கு உட்பட்டு இருக்கின்றது. பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கின்றனர். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கின்றனர். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க முடியாத சூழ்நிலை இன்னமும் இருந்து வருகிறது.
இதற்கு காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம் தான். ஒவ்வொரு பெண்ணும் ஆண்களைப் போல உயிரும், உணர்வும் இருக்கும் ஜீவன்கள் என்பதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறது. ஒருவனை திருமணம் செய்துவிட்டால், அவனுக்காகவே வாழ்ந்து அவனுக்காகவே இறந்து அவனுடன் உடன்கட்டை ஏறும் பழக்கம் இந்தியாவில் இருந்தது மறக்க முடியாதது.
அதனை ஒரு தெய்வீக வழக்கம், புனிதமானது என்று கூறி நெருப்புக்கு தாரைவார்த்த ஆண்களும், அதற்கு துணைபோன பெண்களும் இங்கு வாழ்ந்து தான் இருக்கின்றனர். எந்தவிதமான எதிர்பார்ப்பும் பெண்களுக்கு இருக்கக்கூடாது அப்படி இருந்தால், அது பாவம். ஆசைகள் இருந்தால் துரோகம் என்றும், காதலித்தால் அது சமூக விரோதம் என்றும் ஆண்கள் மனதில் வேரூன்றி விட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களது கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன பெண்களால் செய்ய முடியும்.? இந்த நிலை மாறினால் அது சமூக குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அது மாறவேண்டும் கடந்த காலத்தைவிட நிகழ்காலம் மிக முக்கியமானது. அது ஒளிமயமாக இருக்க வேண்டுமென்றால், கசப்பான அனுபவங்களை தூக்கி எறிந்து அப்புறப்படுத்திவிட்டு, எதையும் யாரிடமும் கூறாமல் வாழ்ந்து விட்டுப் போவதே நல்லது தான்.