தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடலை எரித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், சிறுமி காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியின் இல்லத்தில் இருந்து கடிதம் மற்றும் புகைப்படங்கள், அவரது அலைபேசியில் உள்ள வாட்சப் உரையாடல்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதே பகுதியை சார்ந்த தங்கம் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரது அண்ணன் விக்னேஷ், தாயார் செல்வி ஆகியோரையும் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விசாரணையில், கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியுடன் பழகி வந்த நிலையில், சிறுமியின் காதலிற்கு கார்த்திக்கின் அண்ணன் மற்றும் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. இதனால் தற்கொலை அரங்கேறியுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் கார்த்திக்கின் அண்ணன் மற்றும் தாயை தேடி வருகின்றனர்.