2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பாக இலங்கையிடமிருந்து கடிதம் வந்ததா?

2011 உலகக் கோப்பை போட்டியை நிர்ணயிக்கும் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்து தொடர்பாக இலங்கையிடமிருந்து எந்த கடிதத்தையும் பெறவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யு) தெரிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ.யின் ஏ.சி.யு-வில் உள்ள வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு கடிதப் பரிமாற்றத்தையும் பெற்றவுடனே சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க பேச முடியும் என குறிப்பிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம். இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளது. இல்லாவிட்டால் இலங்கை அணி கோப்பையை வென்றிருக்கும்.

இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் பிக்சிங்கில் குறிப்பிட்ட சில குழுக்கள் ஈடுபட்டது’ என்று இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

அவரது குற்றச்சாட்டை முன்னாள் இலங்கை அணித்தலைவர் சங்கக்கரா திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில் அலுத்காமகேயின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி துலாஸ் அலஹப்பெருமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2 வாரத்துக்கு ஒரு முறை விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும்படி விளையாட்டுத்துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையிலான கமிட்டிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், 2011 உலகக் கோப்பை போட்டியில் சூதாட்ட பிரச்சினை தொடர்பாக இலங்கையிலிருந்து எங்களுக்கு எந்த கடிதமும் கிடைக்கவில்லை, நாங்கள் அதைப் பெற்றவுடன் மட்டுமே அதைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்று பி.சி.சி.ஐ.யின் ஏ.சி.யுவில் உள்ள வட்டாரங்கள் ஏ.என்.ஐ-யிடம் கூறினார்.