உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு 200க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளனர். அவை பல்வேறு சோதனை நிலையங்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாகியுள்ளதாக புனேவை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்திய மருந்து ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம் உடன் இணைந்து தயாரித்துள்ளனர்.
“கோவேக்சின்” என அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசியை, அடுத்த மாதம் நாடு முழுவதும் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு கட்டுப்பாட்டாளர் மற்றும் இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு இயக்குனரின் ஒப்புதலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த மருந்து மனிதருக்கு செலுத்தி பரிசோதிக்கும் முயற்சி வரும் 7ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தொடங்க உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா சமீபத்தில் எழுதிய கடிதத்தில் பரிசோதனை முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிசோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தடுப்புமருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.