நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6 ம் கட்ட ஊரடங்கு வருகின்ற 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 6 கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சில தளர்வுகள் அறிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை.
ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் அதிகமாக இருந்த கொரோனா, பின்னர் பிற மாவட்டங்களிலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கொரோனவால் 2,20,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவால் மொத்த பலி எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ஆம் தேதி (நாளை) ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்து வரும் ஊரடங்கில் பொது போக்குவரத்து மற்றும் தியேட்டர்கள் திறப்பது ஆகியவற்றுக்கான தடைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கு தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறியது, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதனால், ஜூலை 31ம் தேதி நிறைவடைய உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படலாம். இன்னும் சில தளர்வுகள் அரசு அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது. பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் உள்ள தடைகள் அடுத்த மாதம் வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.