ரஷியாவில் தவித்த தமிழக மாணவர்கள்.. உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனு சூட்.. கண்ணீருடன் நன்றி..!!

ரஷ்ய நாட்டில் மருத்துவ படிப்பு படித்த தமிழகத்தைச் சார்ந்த 90 க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள், இந்தி நடிகர் சோனு சூட் உதவியுடன் மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து சேர்ந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் இந்திய அரசின் சார்பில் மாஸ்கோவுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் ரஷ்யாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள், தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக சோனு சூட் தனி விமானத்தை ஏற்படுத்தி, மாஸ்கோவிற்கு அனுப்பி மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார். இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து நேற்று பிற்பகல் புறப்பட்டு, இரவு நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்த விமானத்தில் பாதுகாப்பாக தாயகம் திரும்பிய 90 க்கும் மேற்பட்ட மாணவர்கள். நடிகர் சோனு சூட்டிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர். நடிகர் சோனு சூட் துவக்கத்திலிருந்தே ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும், ஊர் திரும்ப முடியாமல் தவித்த வெளிமாநில தொழிலாளர்களுக்கும் பெரும் உதவியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.