சசிகலாவை ஏற்க தயாராகும் அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில், அவரை அதிமுகவை சேர்ந்த சில ஏற்க தயாராக இருப்பதாகவும், அதற்கு சில கண்டிஷன்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, விடுதலையாவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

அவர் ஆகஸ்ட் மாதம் வெளிவருவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் முடியவுள்ள நிலையில், அதைப் பற்றி எந்த ஒரு பேச்சும் அடிபடவில்லை.

இருப்பினும் தேர்தலுக்கு முன்னர் சசிகலா நிச்சயமாக விடுதலையாகவிடுவார் என்பதால், தமிழக அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

பிப்ரவரி மாதம் தண்டனைக் காலம் முடிந்துவிடும் என்பதால் அவரது வருகையை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீண்ட காலம் தாக்குபிடிக்காது என்று கூறப்பட்டுவந்த நிலையில் ஆட்சிக்காலத்தை அவர் முழுமையாக நிறைவு செய்யவுள்ளார்.

ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். ஆகிய இரு தலைமைகள் கட்சியில் இருந்தாலும், வரவுள்ள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சுகள் இப்போதே அதிமுகவில் எழத்தொடங்கி விட்டன.

இதற்கு அக்கட்சியில் இருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதற்கிடையே சசிகலா வருகைக்கு முன்னர் தங்களுக்கான ஆதரவு வட்டங்களை ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகிய இரு தரப்பும் பெருக்கிக்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்ட பழனிசாமி தனக்கு ஆதரவை பலப்படுத்திக் கொள்ளும் விதமாக அப்பயணத்தை அமைத்துக் கொள்வார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. அந்த வகையில், கட்சியின் முன்னாள் இந்நாள் நிர்வாகிகளை தன்பக்கம் தக்கவைக்க இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சசிகலா சிறை செல்வதற்கு முன்னர் ஓ.பி.எஸ். கட்சி தலைமைக்கு எதிராக போர்கொடி தூக்கிய காரணத்தால், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு சசிகலா சிறைக்கு சென்றார்.

ஆனால், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் இணைந்து சசிகலா குடும்பத்தையே ஓரங்கட்டி விட்டனர். இருப்பினும் சசிகலாவின் விசுவாசிகள் இப்போது அவரை அதிமுகவில் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இதனால் அவர் வெளியே வந்த பின்பு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், சசிகலா விடுதலைக்கு பின்னர் அவரை அதிமுகவுடன் இணைத்துக் கொள்ள கொங்கு பக்கம் இருக்கும் தங்கமணி, வேலுமணி போன்ற அமைச்சர்கள் தயாராக இருக்கின்றனராம். ஆனால் அதற்கு சில கண்டிஷன்களை அவர்கள் வைத்துள்ளார்களாம்.

சசிகலாவை அதிமுகவினுள் ஏற்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கண்டிஷனாம்.

இதை சசிகலா ஏற்கும் பட்சத்தில் அதிமுகவினுள் அரவணைக்க அவர்கள் மீண்டும் தயாராக உள்ளதாகவும், இதற்காக பழனிசாமியின் ஆதரவு வட்டத்தை பெருக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள், கட்சியின் சீனியர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.