பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு Extra Corporeal Membarane Oxygenation (ECMO) என்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எக்மோ என்றால் என்ன?
எக்ஸ்டரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன் என்பதனைத் தான் Extra Corporeal Membarane Oxygenation (ECMO) என குறிப்பிடுகிறார்கள்.
திடீரென ரத்த அழுத்தம் குறைவது, மாரடைப்பு ஏற்படுவது போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் எனும் சூழ்நிலை வரும் போது, இந்தக் கருவியை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.
வழக்கமாக மாரடைப்பு ஏற்பட்டால் இருதயத்தை இயங்கச்செய்ய செயற்கை சுவாச உதவியுடன் மார்பை அமுக்கி இயங்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த மரபு மருத்துவ சிகிச்சைக்கு பலன் இல்லையெனில் எக்மோ உயிர்காக்கும் கருவி பயனளிக்கும்.
நரம்பிலிருந்து ரத்தத்தை பிரித்தெடுத்து அதில் பிராணவாயுவைச் சேர்த்து கார்பன் டை ஆக்சைடை நீக்கும் பணியை எக்மோ கருவி செய்யும்.மேலும் ரத்தத்தை லேசாக உஷ்ணமாக்கி ரத்தக்குழாய்க்கு அனுப்பும்.
சில சந்தர்ப்பங்களில் ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும் வேலையையும் செய்வதாகும், இதனால் இருதயம் மற்றும் நுரையீரலை ரத்தம் பைபாஸ் செய்ய முடிகிறது.
இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் போதே இதயம் மற்றும் நுரையீரலில் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான அடுத்தக் கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.
இது பலனளிக்காத பட்சத்தில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தான் தீர்வு. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரைக்கும் எக்மோ கருவியை பயன்படுத்த முடியும்.
குறிப்பாக, எக்மோ கருவி தேர்ந்த நுரையீரல் மருத்துவ ஆலோசகர் ஒருவரால்தான் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.தவறாகப் பொருத்தப்பட்டாலோ அல்லது தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டாலோ நரம்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் இவற்றை உபயோகிப்பதில் அதிக கவனம் தேவைப்படும்.