நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படும் படத்தின் தற்போதைய நிலை குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி அகிய 2 படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 9ம் தேதியே வெளியாகவேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.
இதனிடையே ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ரஜினி படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். கைதி திரைப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக அவர் பேட்டியளித்த போது கமல் தயாரிப்பில் உருவாகும் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தற்போதைக்கு இப்படம் குறித்து எந்த பதிலும் கூற முடியாது எனவும் தயாரிப்பு நிறுவனம் தான் இது பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ இப்படம் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது. இன்னும் எதுவும் முடிவாகவில்லை. என் அடுத்த படத்தை தற்போது எழுத ஆரம்பித்திருக்கிறேன்” என தெரிவித்தார்.