தொண்டையில் வாழைப்பழம் சிக்கி சட்டக்கல்லூரி மாணவி இறந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை அருகே இருக்கும் சோலையாறு எஸ்டேட் பஜார் பகுதியை சேர்ந்தவர் திரு.செல்வரத்தினம். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் கடைசி பெண்ணான தாரணி(19) திருச்சியில் சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் தாரணியின் தந்தை தான் தினமும் அவருக்கு தேவையான உணவு மற்றும் மாத்திரைகளை கொண்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாரணியின் தந்தை செல்வரத்தினம் கடையில் இருந்து வர காலதாமதம் ஆகியதால் சுமார் 3 மணிக்கு தன் மகளுக்கு உணவு கொண்டு சென்றுள்ளார்.
தந்தை வரும் வரை பசி பொறுக்கமுடியாத தாரணி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக தாரணி வாழைப்பழம் சாப்பிடும் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு வாழைப்பழம் தொண்டையில் சிக்கியுள்ளது.
தொண்டையில் சிக்கிய வாழைப்பழத்தால் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார். இதைப்பார்த்த தாரணியின் தாயார் செல்வி, தொண்டையில் சிக்கிய வாழைப்பழத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
பின் மயங்கி விழுந்த தன் மகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளனர்.
ஆனால் அதற்கு முன்பே தாரணி உயிரிழந்ததாக தாரணியை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வால்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரணியின் இழப்பை சமாளிக்க முடியாமல் அவரின் பெற்றோர் கடும் சோகத்தில் காணப்படுகின்றனர்.