இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா (கிரிக்கெட்), மாரியப்பன் (தடகளம்) உள்ளிட்ட ஐவர் தெரிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹொக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமான கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில், விளையாட்டுத்துறையில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு இந்திய அரசு சார்பில் ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
இதற்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க 12 பேர் கொண்ட தேர்வுக்குழு கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது.
இதில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ‘பாரா’ தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, பெண்கள் ஹொக்கி அணித்தலைவர் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோருக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட இந்திய விளையாட்டு அமைச்சகம், அனைவருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவித்தது.
இதன்மூலம் முதன்முறையாக 5 பேருக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்கப்படுகிறது.