காதல் திருமணம் அல்லது காந்தர்வ திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தங்களுக்கு பிடித்த ஒருவரை விரும்பி அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உறவாகும். சில நேரங்களில் பெரியோர்களின் சம்மதம் அல்லது அவர்களின் சம்மதம் இன்றியும் மனம் ஒத்த இவர்கள் தங்கள் திருமணத்தை நிகழ்த்திக் கொள்கின்றனர்.
காந்தர்வ திருமணம் செய்வோருக்கு பொருத்தம் என்பது வேண்டியதில்லை என்று மூல ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், திருமணத்தில் முதன்மையானது, மனப்பொருத்தமே.
காந்தர்வ திருமணத்தில் தங்கள் குலம், பழக்க வழக்கம் மற்றும் பெற்றோர்களின் எண்ணம் அவர்கள் தங்களின் மீது கொண்டுள்ள அனைத்து கனவுகளையும் புறம் தள்ளி தங்களது விருப்பங்களுக்கு முதன்மையான பங்கினை அளித்து ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.
ஒருவருக்கு நடைபெறும் திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா அல்லது அவர்களின் விருப்பத்தின் பெயரில் நடைபெறும் திருமணமா என்பதை ஜாதகத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ள இயலும். ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கின்ற கிரக நிலைகள் அவர்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களுடைய வாழ்க்கைத் துணையையும் நிர்ணயம் செய்கின்றன.
சிலரின் வாழ்க்கையில் காந்தர்வ திருமணம் என்பது வெற்றியை அளிக்கும் பட்சத்தில் சிலருடைய வாழ்க்கையில் காந்தர்வ திருமணம் அவர்களது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றன. இவையாவும் அவர்கள் பிறந்த நிலையில் இருக்கின்ற கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன.
ஜோதிடத்தில் ஒருவருக்கு எழும் எண்ணங்கள் அவருடைய ஜாதகத்தில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து அறிந்து கொள்ளப்படுகின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வலிமையான கிரகங்கள் இருந்தாலும் அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்து இருந்தாலும் அவர்கள் காதல் புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன.
ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர காரகனான சுக்கிரன், ராகு, கேது, சனி இவர்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமும், களத்திர ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்கள் காதலில் விழுந்து திருமணம் புரிவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
ஆணின் ஜாதகத்தில் திருமணத்தை நிர்ணயம் செய்வது சுக்கிரன் ஆவார். அதேபோலவே பெண்ணின் ஜாதகத்தில் திருமணத்தை நிர்ணயம் செய்வது செவ்வாய் ஆவார். அவர் ராகு, கேது மற்றும் சனியினால் பாதிக்கப்படும் பட்சத்தில் காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன.
பூர்வ புண்ணிய ஸ்தானமானது, களத்திர ஸ்தானத்தில் நின்றாலோ அல்லது களத்திர ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றாலோ காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
காதல் என்பது இரு மனங்கள் ஒன்றிணைந்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் உன்னதமான உறவாகும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இந்த உறவினை பயன்படுத்தி பல தவறான நிகழ்வுகளும், இழப்புகளும் உருவாகின்றன.
எனவே, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் காதல் எண்ணங்கள் ஒருவர் மீது ஏற்படும்போது காதலிக்கும் நபரானது தமக்கான முழு பாதுகாப்பையும், புரிதலையும் அளிக்கும் பட்சத்தில் அது காதலாக உருமாற்றம் அடைத்து வெற்றியை நோக்கி பயணத்தை மேற்கொள்ளும்.
காதல் என்பது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை மட்டும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு உன்னதமான உணர்வாகும். பருவ வயதில் ஏற்படும் காதலை காட்டிலும், நடுத்தர வயதில் தனது துணைவருடன் ஏற்படும் காதலானது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீண்ட நெடிய பயணத்தை கூட சிறு தூரம் பயணம் போன்று கடக்க வைக்கும்.
காதலில் விருப்பமானவர்களுடன் தோல்வியுற்று விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது மிகப்பெரிய மகிழ்ச்சியானது. இதை அவர்கள் உணர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவரிடம் விட்டுக்கொடுத்து செல்லும்போதும் அவ்விடத்தில் அன்பானது அதிகரிக்க துவங்குகின்றது.
காதலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களது துணையை தேர்வு செய்யும் பட்சத்தில் சற்று நிதானம் வேண்டும்.
காதல் திருமணம் என்பது ஒரு சிலருக்கு வரமாகவும், பலருக்கு சாபமாகவும் உண்டாகிறது. விருப்பம் இல்லாத ஒருவரை கட்டாயப்படுத்துவதை காட்டிலும், விருப்பமில்லாத அவரை விட்டு விலகி செல்வது என்பது நாம் அவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு அன்பு பரிசாகும்.
ஆண்மை, பெண்மை என்பது குழந்தைகளை கொடுப்பதிலும், ஈன்றெடுப்பதில் மட்டுமல்லாமல் தனது மனதை கவர்ந்தவரை என்றும் மகிழ்வுடன் பார்ப்பதிலும் தான் பலம் இருக்கின்றது.