ஆட்டிப்படைத்த அஷ்டமத்து சனி! ராகுவின் பார்வையால் என்னவெல்லாம் நடக்க போகிறதோ?

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்தது. பல பிரச்சினைகள் நெருக்கடிகள் ஆட்டிப்படைத்திருந்தது.

எட்டில் கேது குரு அமர்ந்து குடும்பத்தில் குழப்பம், மன உளைச்சலை கொடுத்து வந்தனர் இப்போது ராகு கேது இடப்பெயர்ச்சியாகி ஜென்ம ராகுவாகவும், களத்திர கேதுவாகவும் அமரப்போவதால் கஷ்டங்களும் கவலைகளும் நீங்கும் காலம் வந்து விட்டது, அதிர்ஷ்டங்களும் யோகங்களும் உங்கள் வீட்டு வாசலை தட்டப்போகின்றன.

இனி 18 மாதங்களுக்கு நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்கப் போகிறீர்கள்.

ராகு பிரம்மாண்டம், கேது நேர் எதிராக செயல்படுபவர். நுட்பமாக செயல்படுத்துபவர். வெளியே தெரியாமல் மறைமுகமாக செயல்படுத்துபவர். ராகு உங்க ராசிக்கு வருகிறார். கேது ஏழாம் வீட்டிற்கு வருகிறார்.

ராஜ யோகத்தை தருவார் ரிஷபம் ராகு. ராகு யோக காரகன். அவ்வப்போது சில சோதனைகளைக் கொடுப்பார் அதை சமாளித்தால் ராகு கொடுக்கும் பலன்களை சந்தோஷமாக அனுபவிக்கலாம்.

நல்ல இடமாற்றம்

ராகு கேது பெயர்ச்சி வெளிநாட்டு வாழ்க்கை தேடி வரும். இது ஒரு மிகச்சிறந்த நன்மையாக அமையும். யாரெல்லாம் வெளிநாட்டில் போய் செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகலாம். வெளியூர், வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் சொந்த ஊரில் வந்து செட்டில் ஆகலாம்.

வேலை வாய்ப்பு கூடும்

ராகுவின் பார்வை 3வது இடத்தின் மீது விழுவதால் தொலை தொடர்புத்துறையில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நன்மையை கொடுக்கும். பிள்ளைகளுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எலக்ட்ரானிக்ஸ் படிப்பு, சைபர் கிரைம் படிப்புகள் நல்ல வேலை வாய்ப்பை கொடுக்கும்.

பணப்பிரச்சினை தீரும்

ராகுவின் பார்வை லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணம் பல வழிகளில் வரும். தன லாபம் உங்களை திக்குமுக்காட வரப்போகிறது. கடன் சுமை குறையும். வீடு கட்டலாம். சொத்து வாங்கலாம். வண்டி வாகனம் வாங்கலாம். சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். இனி எதிர்பார்க்காத நல்லவைகள் நடக்கும்.

அற்புதமான பலன்கள்

சனிபகவானும் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும், தெய்வ அனுகூலமும் ஏற்படும். வியாபாரிகளுக்கு ராகு கேது அற்புதமான பலனை தரப்போகிறார். ராசிக்கு 5ஆம் வீட்டை கேது பார்க்கிறார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பிசினசில் நல்ல மாற்றங்கள் வரும்.

விட்டுக்கொடுத்து போங்க

யோகம் இருக்கும் இடத்தில்தான் தோஷம் வரும். ஏழாம் வீட்டில் கேது இருப்பதால் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் கருத்து வேறுபாடுகள் வரலாம் விட்டுக்கொடுத்து போகவேண்டும். அப்பா வழி உறவினர்கள், சகோதர உறவுகளிடம் விட்டுக்கொடுத்து போங்க. அப்பாவின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். பொழுது போக்கு விசயங்களில் எச்சரிக்கை தேவை.

ஆரோக்கியத்தில் கவனம்

அரசியல்வாதிகளுக்கு சில பிரச்சினைகள் வரலாம் தேவையில்லாத வீண் பேச்சுக்களை பேச வேண்டாம். பொருளாதார ரீதியாக அற்புதமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருக்கவும்.ராசி லக்னத்தில் ராகு மன குழப்பத்தை தரும் மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும். கேது ஏழாம் வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க.

ராகுவிற்கு பரிகாரம்

சர்ப்ப தோஷமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ராகு கால நேரத்தில் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்க. திருநாகேஸ்வரம் சென்று வழிபடுங்க. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ராகுகேதுவை தரிசனம் பண்ணுங்க. பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.