ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி குடியரசுத் தலைவராக உச்சம் தொட்ட பிரணாப் முகர்ஜி..!!

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் குடியரசுத் தலைவராக உயர்ந்த பிரணாப் முகர்ஜி, 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் சட்டப் படிப்புகள் படித்த பிரணாப் முகர்ஜி, ஆசிரியராக, பத்திரிகையாளராக, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

1957ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிரதமர் பதவியை தவிர்த்து அரசியலில் உச்சம் தொட்ட பிரணாப் முகர்ஜி, இந்திய வங்கிகளின் பல குழுக்களிலும் பங்கு வகித்துள்ளார்.

உலக வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் பிரணாப் முகர்ஜி பணியாற்றியுள்ளார். அரசியல்வாதியாக மட்டுமின்றி, பொருளாதார நிபுணராகவும் பிரணாப் இருந்துள்ளார். அவரை குறிப்பிட்ட ஒரு பிரிவில் சேர்ப்பது கடினம்.

இந்தியாவின் இளம் நிதி அமைச்சர் என்ற பெருமையை தமது 47ஆவது வயதில் பெற்ற பிரணாப் முகர்ஜியின் நாடாளுமன்ற வாழ்க்கை 1969ஆம் ஆண்டு தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இந்திரா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, அதன் பின்னர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதமுறையாக போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி அதில் தோல்வியடைந்தார். அதன்பிறகு, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982ஆம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

அப்போது யூரோமனி என்ற ஏடு உலகின் சிறந்த நிதி அமைச்சர் என்று பிரணாப் முகர்ஜிக்கு புகழாரம் சூட்டியது.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தன்னை பிரதமராக்குமாறு கேட்ட பிரணாப் முகர்ஜி மீது கோபமடைந்த ராஜீவ்காந்தி, அவரது அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜிக்கு இடம் கொடுக்கவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த பிரணாப் முகர்ஜி காங்கிரஸை விட்டு வெளியேறி, ராஷ்டிரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். “The Turbulent Years 1980-1996” என்ற புத்தகத்தில் இதுபற்றி பிரணாப் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸில் மீண்டும் இணைந்த பிரணாப் முகர்ஜிக்கு, திட்டக்குழு துணைத் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

1995ஆம் ஆண்டு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய பிரணாப் முகர்ஜி, 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பாதுகாப்பு அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

2009ஆம் ஆண்டு நாட்டின் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார். பிரணாப் முகர்ஜியால் பிரதமராக முடியவில்லை என்றாலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் என்ற பொறுப்புகளில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவராக இருந்தார்.

பலிக்காத பிரதமர் கணவு

இந்தியாவின் பிரதமராக முடியவில்லை என்ற வருத்தம் பிரணாப் முகர்ஜிக்கு இருந்ததுண்டு. ஆனால், அதனை எப்போதும் அவர் வெளிக்கட்டிக் கொள்ளவில்லை.

காங்கிரஸ் கட்சிக்குள் அவரை பிரதமராக்குவதற்கு ஆட்சேபனைகள் இல்லாத போதும், காந்தி குடும்பத்தின் விசுவாசியாக இல்லை என்ற காரணத்துக்காக அவர் புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக 2012 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3 சதவீத வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.

ஒரு நாள் ஆசிரியர்

குடியரசுத் தலைவராக இருந்த போது, 2015ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று, தனது பழைய வாழ்க்கையை நினைவுகூறும் வகையில் ஒரு நாள் ஆசிரியராக மாறினார் பிரணாப் முகர்ஜி.

டெல்லி பிரசிடன்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் பாடத்தை மிகுந்த ஆர்வத்துடன் அவர் நடத்தினார். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு மற்றும் அரிசியல் சாசனம் உருவாக்கப்பட்ட வரலாறு உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு அப்போது பிரணாப் முகர்ஜி விளக்கினார்.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 2019ஆம் ஆண்டு பெற்ற பிரணாப் முகர்ஜி, பியான்ட் சர்வைவல்: எமெர்ஜிங் டைமன்சன்ஸ் ஆப் இந்தியன் எக்கனாமி, ஆஃப் தி டிராக், சாகா ஆப் ஸ்ட்ரக்குள் அண்ட் சேக்ரிபைஸ், சேலஞ்சஸ் பிஃபோர் தி நேஷன் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட போது, காந்தி குடும்பத்திற்கு நெருக்கமாக இல்லாமல் போனதால், தனக்கான இடத்தை பிரணாப் பெற முடியாமல் போய்விட்டது என்று வெளிப்படுத்த பாஜக முயற்சித்தது.

அதன் தொடர்ச்சியாக, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் முதன்மை விருந்தினராக பிரணாப் அழைக்கப்பட்டார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. அவருடைய மகள் ஷர்மிஷ்தா முகர்ஜியும் இதுபற்றி கேள்வி எழுப்பினார்.

ஆனால், அசராமல் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரணாப், தன்னுடைய சிந்தனை மற்றும் சித்தாந்தத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்று தெளிவுபடுத்தினார். “வெறுப்பு மற்றும் சகிப்பின்மை ஆகியவை தேசத்தின் அடையாளத்துக்கு ஆபத்தானவை.

இந்தியாவின் தேசிய அடையாளம் ஒரு மொழி, ஒரு மதம் என்ற வரையறைக்கு உட்பட்டதல்ல” என்று பிரணாப் பேசியது இன்றைக்கு காலப் பொருத்தமாக இருக்கும்.