பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் ‘வக்கீல் சாப்!!

அமிதாப் பச்சன், தாப்ஸி நடிப்பில் 2016ஆம் ஆண்டு ‘பிங்க்’ ஹிந்திப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படத்துக்கு, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.இப்படம், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. போனி கப்பூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிய இப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் பிங்க் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டார. அதன்படி தெலுங்கு ரீமேக்கில் உருவாகி வரும் பிங்க் திரைப்படத்திற்கு வக்கீல் சாப் என பெயர் வைக்கப்பட்டது. இதில் அமிதாப் பச்சன், அஜித் ஆகியோர் நடித்த வக்கீல் கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார்…பவன் கல்யாண் நடிக்கிறார். அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். வேணு ஸ்ரீராம் இயக்கி வரும் “வக்கீல் சாப்” படத்தினை போனி கபூர் மற்றும் தில் ராஜு இணைந்து தயாரித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தற்போது அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.