கொரோனா பாதித்தவர்களும்.. குணமடைந்தவர்களும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுமுறைகள் இவைதான்!

கொரோனா வைரஸ் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறதோ அந்த அளவிற்கு குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் உடலில் மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஏனெனில் ஊட்டச்சத்துக்கள்தான் உடல் ஆரோக்கியத்திற்கு முதன்மையானது. சாப்பிடும் திட, திரவ உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் துணை புரியும்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையம், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் சமயத்தில் சாப்பிடும் உணவுகளை பரிந்துரை செய்துள்ளன.

உணவுகள் முறைகள்:

அதில், உடலில் ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கு கலோரிகள் முக்கியமானவை. எனவே கலோரிகளை அடர்த்தியாக கொண்ட உணவுகளை உட்கொள்வது ஆற்றலை மீட்டெடுக்க உதவும்.

  • உணவில் அரிசி, உருளைக்கிழங்கு, ரொட்டி, பாஸ்தா, முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் கலோரிகள் குறைந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். துரித உணவுகளையும் அறவே ஒதுக்கிவிட வேண்டும்.
  • தினமும் உடலுக்கு 75 முதல் 100 கிராம் வரை புரதம் தேவை. அதற்கேற்ப அதிக புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள்.
  • சைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் பயறு, பருப்பு வகைகள், பால் பொருட்கள், சோயா பொருட்கள், நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி இறைச்சி, முட்டை, மீன் சாப்பிடலாம்.
  • பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்துக்கள், போலேட், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன.
  • ஆப்பிள், வாழைப் பழங்கள் முதல் சுரைக்காய், பச்சை இலை காய்கறிகள் வரை அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நோய்த்தொற்றுகள் உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன. தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வரும்போது உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பது அவசியம்.
  • தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். ரசம், சூப் வகைகளை அன்றாட உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பழங்கள், காய்கறிகள் மட்டுமின்றி மூலிகைகள் மற்றும் சில மசாலாப் பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன. அவற்றில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் நிரம்பியுள்ளன.
  • மஞ்சள் கலந்த பால், கிரீன் டீ, ஹெர்பல் டீ போன்றவை சிறந்தது. இவைகளை தொடர்ந்து பருகி வரலாம்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் உணவை விழுங்குவதற்கு சிரமப்படுவார்கள். அதனால் மென்மையான, நன்கு பிசைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. மேற்கண்ட உணவு முறைகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலும் சிறந்தது.