பலருக்கு உடல் எடை அதிகமாக இருப்பது பிரச்சனை என்றால், ஒரு சிலருக்கு உடல் எடை குறைவாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் ஒல்லியாகதான் இருப்பார்கள். குழந்தை பருவம் முதல் வளர்ந்து பெரியவர்கள் ஆன போதிலும் சிலர் ஒல்லியாக இருப்பதுண்டு.
இப்படி எப்போதும் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க சில உணவுகள் உதவி புரிகின்றது.
அந்தவகையில் தற்போது இந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- மீனில் உள்ள ஒமேகா 3 உங்களுடைய உடல் எலும்புகளுக்கு வலிமை தரக்கூடியது. அதனால் குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது மீன் சாப்பிடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
- இரவு படுக்கைக்குத் தூங்கச் செல்லுகின்ற பொழுது பாலில் சிறிது சுக்கு தட்டிப் போட்டு காய்ச்சிக் குடிக்க வேண்டும். வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்ற மலச்சிக்கலைத் தடுக்கும் பழங்களைச் சாப்பிடலாம்.
- அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.
- பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். உடல் மெலிந்தவர்கள் இதை தினசரி பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல பாசிப்பயறை அரைத்து தோசையாகவும் செய்து சாப்பிடலாம்.
- பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும். பாதாமில் புரதச்சத்து மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு வலிமை பெறும். தோள்கள் வலுவடையும். மெலிந்த தேகம் தேறும்.
- சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் நன்கு தேறும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து ஜூஸாகவும் சாப்பிடலாம்.
- தூதுவளையை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும்.
- இரவில் ஒரு கைப்பிடியளவு ஊற வைத்த கொண்டைக் கடலையை 10 எடுத்து இரவு ஊற வைத்த அதே நீருடன் சேர்த்துக் கடலையை மென்று சாப்பிட்டு வர வேண்டும். அதோடு வாக்கிங் மற்றும் சிறுசிறு உடற்பயிற்சி செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.
- பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்துப் பேரிச்சம்பழ லேகியம் செய்து வைத்துக் கொண்டு தினமும் காலை மற்றும் மாலை என இரண்மு முறை 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மெலிதாக இருக்கும் உடல் பருமன் ஆகும்.
- முருங்கை இலையின் ஈர்க்குகளை நன்கு கழுவி எடுத்துச் சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால் கை, கால் அசதி நீங்கும். உடல் வலிமை பெறும்.