கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு அண்மையில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல அறிஞர்களுடன் கலந்துரையாடி, புத்தகங்களினை படித்து ஆய்வு செய்தே நாடாளுமன்றத்தில் நிலவுரிமை குறித்துப் பேசினேன்.
இலங்கையின் ஆதிக்குடிமக்கள் பேசியது தமிழ் மொழிதான் என நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உண்டு. கள்ளத்தோணிகள் நாமல்ல. நீங்கள் எம்மைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட முள்ளிவாய்க்காலில் தான் அதிகளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே நான் எனது முதலாவது நாடாளுமன்ற அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்றிருந்தேன்.
வன்னியில் இருந்தவர்கள் ஒருபோதும் பயங்கரவாதிகள் அல்ல. அனைவரும் அப்பாவி பொதுமக்களே. வயாதனவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பப்படுகிறது.
இளைஞர்கள் இவ்வளவு காலமும் நாடாளுமன்றம் சென்று என்ன செய்தார்கள்?
அங்ஜனுக்கு என்னைவிட விருப்பு வாக்குகள் அதிகம் கிடைக்கக் காரணம், அவரைப் போன்று நான் மதுபானம், பணம், வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்து வாக்குக் கேட்க்கவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் என்னிடன் பேசியிருந்தார்.
நான் அவருக்கு பதிலளிக்கையில் தீர்வு என்று ஒன்றிக்குள் கட்சி இறங்கும் போது அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறினேன்.
நான் எனது சம்பந்தியுடன் இணைந்து அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்திகளையும் செய்ய எப்பொழுதும் தயாராய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.