நடிகர் வடிவேல் பாலாஜியின் உயிரிழப்பு ஒட்டு மொத்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியான ஒரு விடயம்.
எங்கே ஓர் சாதாரண இடத்தில் பிறந்து இன்று வடிவேல் பாலாஜியாக உயர்ந்திருக்கும் நடிகரின் வாழ்க்கை பயணத்தை சற்று மீட்டு பார்க்கலாம்.
மதுரையை சேர்ந்த பாலாஜி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது படிப்பு ஏறாத காரணத்தால், படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டார்.
அதன் பிறகு என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் தவித்து வந்த நிலையில், நடனத்தில் பாலாஜிக்கு ஈடுபாடு வரத் தொடங்கியது.
நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், சின்ன சின்ன மேடைகளில் ஏறியும் நடனமாடி வந்தார் பாலாஜி. அவரது நடனத் திறமையை பார்த்து பலரும் பாராட்டினார்கள்.
சினிமாவில் நடனக் கலைஞராக வர வேண்டும் என நினைத்த பாலாஜி எப்படி காமெடியன் வடிவேலு பாலாஜியாக மாறினார் என்பது க்யூட்டான ஒரு குட்டி ஸ்டோரி.
காதலன் படத்தில் பிரபலமான ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு மேடையில் ஆட வேண்டிய சூழ்நிலையில், பாலாஜியின் நண்பர் பிரபுதேவா ஆகவும், கருப்பாக இருப்பதால், வடிவேலு ஆக பாலாஜியையும் நடனமாட கூறியுள்ளனர். அதன் பிறகு, நமக்கு வடிவேலு பாடி லேங்குவேஜ் நல்லா வருதே என யோசித்த அவர், அதன் பிறகு வடிவேலு பாலாஜியாகவே மாறியுள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த தனது பாட்டியை பங்கமாக கலாய்த்து அடிக்கடி பாலாஜி காமெடி செய்வது வழக்கம். அவரது காமெடியை பார்த்த அவரது பாட்டி, அப்படியே வடிவேலு மாதிரியே பண்றியே டா என பாராட்டி உள்ளார். தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வடிவேலு போலவே நடித்து காட்டியும், வசனம் பேசியும் ஒத்திகை பார்த்து, எல்லாம் ஓகே ஆன பிறகு, வடிவேலு வேஷங்களை போட்டு நாடகங்களில் கலக்கினார். பின்னர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
வைகைப் புயல் வடிவேலுவை போலவே தானும், காமெடியில் கலக்கி சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை நடிகர் வடிவேலு பாலாஜிக்கு நிறையவே இருந்தது. ஆனால், கடை நிலை சினிமா கலைஞர்களின் வறுமை நிலை இவரையும் வாட்ட, சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல், உயிரிழந்த சோகம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.