வருங்கால கணவருடன் அவுட்டிங் போன இளம் என்ஜினீயர்

திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், தனது திருமணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என பலரும் மனதில் ஆயிரம் கோட்டை கட்டுவார்கள். ஆனால் அந்த கனவை எல்லாம் தகர்க்கும் வகையில் இளம்பெண்ணுக்கு நடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா. 26 வயதான கமலா, பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பின்னர் மேல்படிப்பு படிக்க ஆசை பட்ட அவர், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தனது மேற்படிப்பை தொடர்ந்த அவருக்கு நல்ல வேலையும் கிடைத்தது. புதிய வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு, திருமணம் செய்ய கமலாவின் பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். இதையடுத்து மாப்பிளை தேடும் படலம் நடைபெற்ற நிலையில், கமலாவின் ஆசைக்கு ஏற்றவாறு மாப்பிள்ளையும் கிடைத்தார்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆசை பட்டது போல நல்ல வேலையும், கமலாவின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு மாப்பிள்ளையும் கிடைத்ததால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளார். இதற்கிடையே அடிலாண்டாவில் உள்ள உறவினர்கள் கமலாவை அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார்கள். இதையடுத்து கமலா தனது வருங்கால கணவரையும் அழைத்து கொண்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உறவினர்களுடன் நேரம் செலவிட்ட நிலையில், மீண்டும் இருவரும் தங்களது வீட்டிற்கு செல்ல காரில் கிளம்பியுள்ளார்கள்.

அப்போது வரும் வழியில் இருந்த பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் நன்றாக சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த அவர்கள் காரில் இருந்து இறங்கி நீர்விழ்ச்சிக்கு அருகே சென்று செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் கால் சறுக்கி நீர்விழ்ச்சிக்குள் விழுந்தார்கள். தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் கமலா பரிதாபமாக நீரில் மூழ்கி பலியானார். சம்பவம் குறித்து அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த கமலாவின் வருங்கால கணவரை காப்பாற்றினார்கள்.

இதற்கிடையே உயிரிழந்த கமலாவின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தான் ஆசை பட்டது போல நல்ல வேலை கிடைத்து, திருமணமும் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இளம் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தை மொத்தமாக புரட்டி போட்டுள்ளது.