ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவை 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிந்து 5-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணியும், தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து மும்பை அணியில் ரோகித் மற்றும் குயிண்டன் டி காக் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் குயிண்டன் டி காக் ஒரு ஓட்டத்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின் வந்த சூர்ய குமார் யாத்வ்வுடன் ஜோடி சேர்ந்த ரோகித், கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
இதனால் மும்பை அணியின் ரன் விகிதம் ஜெய் வேகத்தில் எகிறியது.
தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி வர, ஆட்டத்தின் 11-வது ஓவரை வீசிய சுனில் நரைன் பந்து வீச்சில் 11-வது சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த சுவராப் திவாரி தன் பங்கிற்கு 13 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ஆட்டத்தின் 18-வது ஓவரில் அரைசதம் விளாசியிருந்த ரோகித் 80 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது. பொல்லார்ட் 7 பந்தில் 13 ஓட்டங்களுடனும், குருணால் பாண்ட்யா 1 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் 7 ஓட்டங்களிலும், சுனில் நரைன் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ஓட்டங்கள், நிதிஷ் ரானா 24 என அடுத்தடுத்து வெளியேறினர். இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இவர்களைத் தொடர்ந்து வந்த கொல்கத்தா அணி வீரர்கள், மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறியதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் மும்பை அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன்னர் சென்னை அணியுடனான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது.
அதே போன்று 2020-ஆம் ஆண்டின் தன்னுடைய முதல் போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்துள்ளது.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி மன்னன் ரோகித் சர்மா கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.