இன்றைய உலகில் சுவையான துரித உணவுகளுக்கு ஆசைப்பட்டு ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்தும் குறைந்து வருகிறது.
இதன் விளைவு எண்ணற்ற நோய்கள், பெரியவர்கள் தான் இப்படி என்றால் குழந்தைகளை கூட சுவைக்கு அடிமையாக்கிவிடுகின்றனர்.
பள்ளி செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு காலை உணவு பிரட், பிஸ்கட்டுடன் முடிந்து விடுகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்கு திறவுகோலாக அமையும்.
இனிப்புக்காக சுக்ரோஸ் கலக்கப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகிறது, இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள், கொழுப்பு சத்து அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது.
உப்பு பிஸ்கட்டில் சோடியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் உருவாகின்றன. இத்துடன் கெட்ட கொழுப்பும் அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கும், சிறுவயதிலேயே பிஸ்கட்டுகளை அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதுடன் குடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும்.