எஸ்.பி.பி மறைவிற்கு நயன்தாராவின் உருக்கம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் மரணத்தை அறிந்த ரசிகர்களுக்கு பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில், நடிகை நயன்தாராவும் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், தெய்வீக குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்.பி பாலசுப்ரமணிய சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களும், காரணங்களும் பொருத்தி இருக்கும்.

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும், உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும்.

உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி.

நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம்.

பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் திரை உலக சகாக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது என தெரிவித்துள்ளார்.