மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – கார்த்திகா தம்பதி. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், போலியோவால் பாதிக்கப்பட்ட தங்களது 10 வயது மகன் விக்னேஷை மட்டும் பாட்டி பழனியம்மாளிடம் ஒப்படைத்து சென்றுவிட்டனர். குழந்தை பிறந்து 10 மாதங்களில் விட்டு சென்ற பாலகிருஷ்ணன், 10 வருடங்கள் ஆகியும் மகனை காணவில்லை என கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாத தனது கணவரையும் மற்றும் தனது தாயையும் ஒற்றை பெண்மணியாக பராமரிக்கும் பழனியம்மாள் தனது பேரனையும் கவனித்து வருகிறார்.
மிகவு ஏழ்மையான சூழலில் வாழும் இவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மாதந்தோறும் வழங்கும் ரூ.1000 பணமும் இவர்களுக்கு இன்று வரை வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அரசு அவர்களின் நிலையறிந்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அரசு ஊழியர்கள் பழனியம்மாளின் வீட்டை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவ முன்வந்துள்ளனர். போலியோவால் பாதிக்கப்பட்ட அந்த 10 வயது சிறுவனின் குடும்பத்துக்கு ஒரு வருட உணவுக்கான செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு 2 ஆடுகளையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கியுள்ளனர். இந்த செயல் தற்போது மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.