சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்வியால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்குள் இவர்தான் பல சிக்கல்கள் ஏற்பட முக்கிய காரணம் என ஒரு வீரரை கட்டம் கட்டி உள்ளனர்.
அணித்தலைவர் டோனி, முக்கிய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் ஆகிய இருவரும் அந்த வீரர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை அணி இந்த சீசனின் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை வெற்றி கொண்டாலும்,
துடுப்பாட்டத்தில் துவக்க வீரர்கள் சரியில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் என்ற வலுவான அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதால் அந்த விமர்சனங்கள் பெரிதாக்கப்படவில்லை.
ஆனால் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணியுடன் திட்டமே இல்லாமல் சொதப்பியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
தற்போது சென்னை அணியில் துடுப்பாட்டத்தில் மிகுந்த கவலை அளிப்பது துவக்க வீரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோரின் பங்களிப்பு தான் என கூறப்படுகிறது.
வாட்சன் அதிரடியாக ஆட முயற்சி மேற்கொள்கிறார். ஆனால் முரளி விஜய் துடுப்பெடுத்தாடவே திணறுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
மூன்று போட்டிகளிலும் அவரது திணறல் ஆட்டத்தால் எஞ்சிய துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு சென்னை அணியின் திட்டம் சொதப்பியதாக கூறப்படுகிறது.
இரண்டு மோசமான தோல்விகளால் சிக்கலில் இருக்கும் சென்னை அணி உடனடியாக தன் அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை செய்ய வேண்டி உள்ளது.
தோல்விக்கு பின் பேட்டிகளில் துவக்கம் சரியாக அமையவில்லை என முரளி விஜயை மறைமுகமாக சுட்டிக் காட்டினார்கள் எனவும் கூறப்படுகிறது.