கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. வடிவேலு போன்ற தோற்றம் கொண்ட பாலாஜி தன் உடல்மொழியையும் வடிவேலு போல மாற்றிக்கொண்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.இவருக்கு கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார்.
இந்நிலையில் அவரது சகக் கலைஞர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் அவர் பணியாற்றிய விஜய் தொலைக்காட்சி எந்த உதவியும் செய்யவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வடிவேல் பாலாஜியின் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவர்களை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அதில் அனைவரும் வடிவேல் பாலாஜி உடனான நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடிவேல் பாலாஜியின் நண்பர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ‘ஒருமுறை வடிவேல் பாலாஜி வீட்டுக்கு ஒருவர் திருட வந்துள்ளார். எல்லாப் பொருள்களையும் திருடிவிட்டு கிளம்பும்போது அங்கிருந்த வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு அது அவர் வீடு எனத் தெரிந்துகொண்டுள்ளார். அதனால் எல்லா பொருட்களையும் அங்கேயே வைத்து ‘இது உங்கள் வீடு எனத் தெரியாமல் திருட வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்’ எனக் கூறியதைக் கேட்டதும் அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.







