தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரைத் தெரிவு செய்யும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இணைக்கப்பாடு இன்மையால் அதன் தலைவர் இரா.சம்பந்தனால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர், பேச்சாளர், பிரதம கொறடா ஆகிய பதவிகளைத் தீர்மானிக்கும் நோக்கில் இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. எனினும், பேச்சாளர், பிரதம கொறடா ஆகிய பதவிகளுக்கான தேர்வு இடம்பெறாமல் காலவரையறையின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்ற இன்றைய கூட்டத்தில் முதலில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அதன் தலைவராக இரா.சம்பந்தன் மீண்டும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இரண்டாவதாக கூட்டமைப்பின் பேச்சாளர் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், தான் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன், சி.சிறிதரனை அடுத்த பேச்சாளராக சிபாரிசு செய்வதாகத் தெரிவித்தார். இந்தத் தேர்வை இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வழிமொழிந்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், “பேச்சாளர் பதவியை ரெலோவுக்கு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதன்போது, “பேச்சாளர் பதவி கட்சிக்கு மட்டுமே உரியது. ஆனால் நாடாளுமன்ற ரீதியிலான பதவிகளில் ஒன்றான குழுக்களின் பிரதித் தலைவர் பதவி கடந்த ஆட்சியில் தனித்து ரெலோவிடமே வழங்கப்பட்டது. அப்போது பங்கிட எவரும் கோரவில்லை” என்ற கருத்து தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது. அத்துடன், பேச்சாளர் பதவி ரெலோவுக்கு வழங்க முடியாது எனவும் குறித்த எம்.பிக்களினால் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சமரசம் செய்ய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முயன்றபோது ரெலோவுக்கு வழங்க முடியாது என உறுதியான கருத்து நிலவியதால் திகதி குறிப்பிடப்படாது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்றிரவு நடைபெறவுள்ளது.